Thursday, November 3, 2011

பாகிஸ்தான் அணியில் மீண்டும் அப்ரிதி

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணியில் முன்னாள் கப்டன் அப்ரிதி மீண்டும் இடம்பிடித்துள்ளார். கடந்த மே மாதம் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது, பயிற்சியாளர் வக்கார் யூனிசுடன் ஏற்பட்ட மோதலையடுத்து கப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் அப்ரிதி. அதன்பிறகு கிரிக்கட் வாரிய நிர்வாகிகளுடன் மோதல் ஏற்பட்டதால் ஓய்வுபெற்றார்.

இந்த நிலையில் கிரிக்கட் வாரிய நிர்வாகிகள் மாற்றப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இதையடுத்து வாரியத்தின் புதிய தலைவரான ஜகா அஷ்ரப்பை, அப்ரிதி புதன்கிழமை சந்தித்தார். இதைத்தொடர்ந்து மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கட் வாரிய தலைவர் அஷ்ரப் கூறுகையில், அப்ரிதி, அப்துல் ரசாக் ஆகியோரின் அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தை கருத்தில் கொண்டு அவர்கள் இருவரும் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

சூதாட்டப் புகாரில் வஹாப் ரியாஸிடம் விசாரணை நடத்தப்படலாம் என்று தகவல் வெளியானதால் அவர் அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டுள்ளார். தான் அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளது குறித்துப் பேசிய அப்ரிதி, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் வாரிய தலைவர் அஷ்ரப்பை சந்தித்த போது அவர் மிகவும் அன்போடும், ஊக்கப்படுத்தும் வகையிலும் பேசினார்.

நான் பாகிஸ்தானுக்காக விளையாட விரும்புகிறேன். கப்டனாக யார் இருந்தாலும் அவர்களுக்கு கீழ் விளையாடுவதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. இப்போதைய கப்டன் மிஸ்பாவுடன் எனக்கு நல்லுறவு உள்ளது. அவருக்கு ஆதரவாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

அணி விவரம்: மிஸ்பா(கப்டன்), இம்ரான் பர்கத், ஹபீஸ், யூனிஸ்கான், உமர் அக்மல், ஷபிக், மாலிக், அப்ரிதி, ரசாக், அஹமது, ஜூனைத்கான், குல், சீமா, தன்விர், ரெஹ்மான், சயீத் அஜ்மல்.
Share