Friday, November 4, 2011

கறுப்பு பணத்தை டிபாசிட் செய்தவர்கள் பட்டியல் வெளியிட தயங்குவது ஏன்? அத்வானி

 மும்பை: ""வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை குவித்து வைத்துள்ளவர்களின் பெயர்களை வெளியிட, மத்திய அரசு தயக்கம் காட்டுவது ஏன்?,'' என, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கேள்வி எழுப்பியுள்ளார். ஊழலுக்கு எதிராக, விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, நாடு முழுவதும் ரத யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம், கோலாபூர், சதாரா ஆகிய இடங்களில் நடந்த பொதுக் கூட்டங்களில், நேற்று அவர் பேசியதாவது: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், ஊழல் அதிகரித்து விட்டது. இதனால், ஜனநாயகத்துக்கு அவமதிப்பு ஏற்பட்டு விட்டது. சுவிட்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில், நூற்றுக்கணக்கான இந்தியர்கள், சட்ட விரோதமாக கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். இந்த பணத்தை இந்தியாவுக்கு திரும்ப கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவில்லை. ஜெனிவாவில் உள்ள வங்கியில், கறுப்புப் பணத்தை டிபாசிட் செய்துள்ள இந்தியர்கள், 700 பேரின் பெயர்களை வெளியிட மத்திய அரசு தயங்குகிறது. இந்த நபர்களை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு என்ன நேர்ந்தது. காங்கிரஸ் ஆதரவாளர்கள் என்பதால், அவர்களின் பெயர்களை வெளியிட மறுக்கிறதா? வெளிநாட்டில் பணத்தை குவித்துள்ளவர்களின் பெயர்களை வெளியிடும்படி, மத்திய அரசை பா.ஜ., வற்புறுத்தும். கறுப்புப் பணத்தை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என, கோரிக்கை விடுக்கும்.
கடந்த 2008ல் பார்லிமென்டில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெறுவதற்காக, மத்திய அரசு, குதிரை பேர நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இது, ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல். அதிகரிக்கும் பணவீக்கத்தை மத்திய அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதற்கு, காங்கிரஸ் கட்சியில், மத்திய அமைச்சர்கள் மத்தியில், ஐ.மு., கூட்டணி கட்சிகளுக்குள், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நிலவும் ஊழலே காரணம். இவ்வாறு அத்வானி பேசினார்.

ஜனாதிபதியுடன் சந்திப்பு : நிதின் கட்காரி தலைமையிலான பா.ஜ., பிரதிநிதிகள் குழு, டில்லியில் நேற்று ஜனாதிபதி பிரதிபாவை சந்தித்து, காங்கிரஸ் ஆட்சி நடக்கும் கோவா மாநிலத்தில் சட்ட விரோத சுரங்கத் தொழில் நடப்பதாகவும், இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மனு அளித்தனர். கோவாவில், 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, சட்ட விரோத சுரங்கத் தொழில் நடப்பதாகவும், இதில், அம்மாநில அமைச்சர்கள் சிலருக்கு தொடர்பு உள்ளதாகவும், அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share