Wednesday, November 2, 2011

மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றியை நோக்கி செல்கிறது

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் டேரன் பிராவோ 195 ரன்கள் எடுத்து கைகொடுக்க மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றியை நோக்கி செல்கிறது. வங்கதேசம் சென்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட்தொடரில் பங்கேற்கிறது.
சிட்டகாங்கில் நடந்த முதல் டெஸ்ட் டிரா ஆனது. இரண்டாவது டெஸ்ட் தாகாவில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகள் அணி 355, வங்கதேசம் 231 ரன்கள்
எடுத்தன.
பின் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய மேற்கிந்திய தீவுகள் அணி மூன்றாம் நாள்
ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 207 ரன்கள் எடுத்திருந்தது. டேரன் பிராவோ(100),
கீமர் ரோச்(4) அவுட்டாகாமல் இருந்தனர்.
நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த
மேற்கிந்திய தீவுகள் அணியின் கீமர் ரோச்(12) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய டேரன்
பிராவோ, அணியின் ஸ்கோரை வலுவாக்கினார்.
இவருக்கு ஒத்துழைப்பு தந்த சந்தர்பால் அரைசதம் அடித்தார். ஐந்தாவது
விக்கெட்டுக்கு 143 ரன்கள் சேர்த்த போது, 297 பந்தில் 5 சிக்சர், 12 பவுண்டரி உட்பட
195 ரன்கள் எடுத்த டேரன் பிராவோ இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.இரண்டாவது இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுக்கு 383 ரன்கள்
எடுத்து டிக்ளேர் செய்தது. சந்தர்பால்(59) அவுட்டாகாமல் இருந்தார்.
பின் 508 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய வங்கதேச
அணிக்கு இம்ருல் கெய்ஸ்(9) மோசமான துவக்கம் அளித்தார். அடுத்து வந்த நபீஸ்(18),
ரகிபுல் ஹசன்(17) சோபிக்கவில்லை.
பொறுப்பாக ஆடிய துவக்க வீரர் தமிம் இக்பால் அரைசதம் அடித்தார். நான்காம் நாள்
ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 164 ரன்கள்
எடுத்து, 344 ரன்கள் பின்தங்கி உள்ளது. தமிம் இக்பால்(82), முஷ்பிகுர் ரஹிம்(33) அவுட்டாகாமல் இருந்தனர். மேற்கிந்திய
தீவுகள் அணி சார்பில் பிடல் எட்வர்ட்ஸ், டேரன் சமி, சாமுவேல்ஸ் தலா ஒரு விக்கெட்
வீழ்த்தினர்.
இன்று ஒருநாள் மட்டும் மீதமுள்ள நிலையில் வங்கதேச துடுப்பாட்ட வீரர்கள்
பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீதமுள்ள ஏழு விக்கெட்டை காப்பாற்றும் பட்சத்தில்
தோல்வியின் பிடியில் இருந்து தப்பலாம்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தும் பட்சத்தில்
இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை 1-0 எனக் கைப்பற்றலாம்.
Share