Tuesday, November 1, 2011

தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு!

தமிழ் சினிமா படங்களின் கதைகளை, தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி இயக்குநர்கள் திருடுவதாக டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை இயக்கியவர் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார். இவர், டைரக்டர் விஜயநந்தா இயக்கி இருக்கும் "விளையாட வா" படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில், படத்தின் ஆடியோ சிடி.யை வெளியிட்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், பொதுவாக சினிமா துறையில், கதாசிரியர்களுக்கு மதிப்பு இல்லாமல் போய் விடுகிறது. விளையாட வா படத்திற்கு கதை, வசனம் எழுதியிருக்கும் க‌மலேஷ்குமார், என்னுடன் பல படங்களின் கதை விவாதத்தில் பங்கேற்று பணிபுரிந்துள்ளார். நிறைய கதைகளும் எழுதியுள்ளார். ஆனால் அவரது திறமை இன்னும் வெளிவராமல் இருக்கிறது. கமலேஷ்குமார் கதை, வசனத்தில் நான் இயக்கிய படம் எதிரி. அதில் திருமணமாகப் போகும் பெண்ணை ஆள் மாறாட்டத்தில் தவறுதலாக கடத்தி வருவது போன்று காட்சி இருக்கும். அந்த கதையை தெலுங்கில் திருடி படம் எடுத்து விட்டனர். அந்த படத்தை மீண்டும் தமிழில் எடுத்து சமீபத்தில் வெளியிட்டார்கள். நண்பர்கள் திருமண மண்டபத்தில் புகுந்து வேறு பெண்ணை கடத்த போய் தவறுதலாக கதாநாயகியை கடத்தி வந்து வருவது போல் காட்சி இருந்தது. இது “எதிரி” படத்தின் கதை. இதுபோல் பைக்கை வைத்து கமலேஷ்குமார் ஒரு கதை உருவாக்கி இருந்தார். அந்த கதையையும் திருடி படம் எடுத்து விட்டனர் என்று குற்றம் சாட்டி பேசினார் கே.எஸ்.ரவிக்குமார்.

கே.எஸ்.ரவிக்குமார் சொன்ன அந்த இரண்டு படமும்‌ வேறு எந்த படமும் அல்ல. சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த "உத்தமபுத்திரன்" மற்றும் "பொல்லாதவன்" படங்கள் தான் என்று ஆடியோ விழாவிற்கு வந்தவர்கள் முனுமுனுத்தனர்.

நீங்கள் சொல்வது எல்லாம் சரி தான் சார், தமிழில் உள்ள டைரக்டர்கள் சிலரும், இதுபோன்று வேறு மொழி படங்களின் கதையை திருடி படம் எடுக்கிறார்களே, அது உங்களுக்கு தெரியாதா...?
Share