Thursday, October 6, 2011

திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் ஓட்டு வேட்டை; மோதல் அபாயம்


சென்னை : தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல், ஓட்டு வேட்டை சூடு பிடித்துள்ளது. போட்டியிடும் இரு அணியினரும் ஒருவரை, ஒருவர் குறை கூறி, ஓட்டு வேட்டை நடத்துவதால் மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் வரும், 9ம் தேதி நடக்கிறது. இதில் தலைவர் பதவிக்கு, எஸ்.ஏ.சந்திரசேகரும், கேயாரும் போட்டியிடுகின்றனர். தேர்தலில் சந்திரசேகர் அணியில், துணைத் தலைவர்கள் பதவிக்கு ராதாகிருஷ்ணன், கதிரேசன் ஆகியோரும், செயலர் பதவிக்கு கே.ராஜகோபால், தேனப்பனும், பொருளாளர் பதவிக்கு கலைப்புலி எஸ்.தாணுவும் போட்டியிடுகின்றனர். கேயார் அணியில், துணைத் தலைவர் பதவிக்கு சத்யஜோதி தியாகராஜன். டி.சிவா, செயலர் பதவிக்கு முரளிதரன், ஏ.எம்.ரத்னம், பொருளாளர் பதவிக்கு அன்பாலயா பிரபாகரனும் போட்டியிடுகின்றனர். இரு அணியிலும் தலா, 21 பேர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்.

இதில் கேயார் அணியினர், நேற்று முன்தினம், தேர்தல் அறிக்கை வெளியிட இருந்தனர். கடைசி நேரத்தில் அறிக்கை வெளியிடவில்லை. தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படவில்லையா என்று வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில், இவர்களின் ஆதரவு தயாரிப்பாளர்கள் கேட்டதற்கு, "தேர்தல் அறிக்கை முன் கூட்டியே தயாரித்து வைக்கப்பட்டு மாலையில் வெளிட இருந்தது. இதில் உள்ள விஷயங்களை எப்படியோ எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிந்து கொண்டு, அவசர, அவசரமாக, அவரது அணியினரின் கூட்டத்தை அன்று காலையில் கூட்டி, நமது தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கியமான விஷயங்களை, அவரது அறிக்கையில் சேர்த்து வெளியிட்டு விட்டார். இதனால் நமது தேர்தல் அறிக்கை வரும், 8ம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதில் தயாரிப்பாளர்களுக்கு நிறைய நன்மைகள் இருக்கும் என்றனர். சந்திரசேகர் தனிஅணியின் சார்பில், 21 அம்ச தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, "தயாரிப்பாளர்களுக்கு கலங்கரை விளக்கமாக தயாரிப்பாளர்கள் சங்கம் விளங்கும். நிறைய சலுகைகளும் இருக்கும். பதவிகளை தவறாக பயன்படுத்தும் சுயநலவாதிகள் யாரும் அணியில் இல்லை. தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு பதவியை தவறாக பயன்படுத்தினால், அவர்கள் யாராக இருந்தாலும் பொதுக்குழுவை கூட்டி அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பதவியிலிருந்து நீக்கப்படுவர், எதிர் அணியினர் வெற்றி பெற்றால், சங்கத்தை சிறப்பாக நடத்த முடியாது என்று சொல்லி சந்திரசேகரும், அணியினரும் ஓட்டுவேட்டை நடத்தி வருகின்றனர்.

"கடந்த ஐந்தாண்டுகளாக சங்க நிர்வாகிகளில் பலர் முந்தைய ஆளுங்கட்சியின் விசுவாசிகளாக இருந்த போது, துணைத்தலைவராக, எஸ்.ஏ.சந்திரசேகரும் இருந்தார். அவர் உண்மையானவராக இருந்திருந்தால், சங்கத்தில் நடந்த தவறுகளை அப்போதே தட்டிக்கேட்டிருக்க வேண்டும். இல்லையேல், முறைகேடாக செயல்படும் சங்கத்தில் இருக்க முடியாது என்று ராஜினாமா செய்திருக்க வேண்டும். சுயநலம் காரணமாகத் தானே அவர்களோடு உடனிருந்தார். இவர் தலைவரானால் எப்படி திடமாகவும், உண்மையாகவும் சங்கத்தை நடத்த முடியும் என்று, கூறி கேயார் அணியினர் ஓட்டு வேட்டையைத் துவங்கியுள்ளனர். ஒருவரை, ஒருவர் குறை கூறி ஓட்டுவேட்டை நடத்தி வருவதால் இரு அணியினருக்கும் இடையே மோதல் ஏற்படும் நிலை உருவாயுள்ளது.
Share