Friday, September 16, 2011

'7ஆம் அறிவு' தமிழர்களின் பெருமையை பேசும்! - உதயநிதி ஸ்டாலின்


முறுக்கு மீசையும், முரட்டு புஜமுமாக விஸ்வரூப காட்சி தரும் சூர்யாவைப் பார்த்தாலே '7ஆம் அறிவின்' கதையை கேட்கத் தோணுகிறது. ஆனால், விடாப்பிடியாக மறுக்கிறார் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின். அவர் ஹீரோவாக நடிக்கும் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்திற்கு பிரேக்விட்டு '7ஆம் அறிவில்' பிஸியாக இருக்கிறார் உதய். அவரிடம் பேசினோம்.
'7ஆம் அறிவு' எப்படி வந்திருக்கு?
ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும் இப்படி ஒரு படத்தை நாம தயாரிக்காமல் போய்ட்டோமே என்கிற ஏக்கத்தை ஏற்படுத்தும் படமா வந்திருக்கு. அந்த வகையில் எனக்கு ரொம்ப சந்தோஷம். இது 5-ம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த போதிதர்மா என்கிற புத்த துறவி பற்றிய கதை. இவருடைய வாழ்க்கையின் சில பகுதிகளோடு இப்போது வாழும் கதாபாத்திரங்களையும் சேர்த்து அழகா ஒரு படம் பண்ணியிருக்கார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்த துறவி வேடத்தில்தான் சூர்யா பட்டையக் கிளப்புகிறார். இது தமிழர்களின் பெருமையைப் பேசுற படமா இருக்கும்.
காரணம், போதிதர்மாவை சீனாவில் கோயில் கட்டி கொண்டாடுறாங்க. இதுக்காகவே சீன மொழியில் ஒரு பாடலையும் படத்தில் சேர்த்திருக்கோம். சந்திரமுகியின் 'ரா... ரா...' மாதிரி இந்தப் பாட்டும் நிச்சயம் ஹிட்டாகும்.
ஸ்ருதி எப்படி நடிச்சிருக்கார்...?
பொதுவாக ஒரு படத்துல ஹீரோயினோட பங்கு கிட்டத்தட்ட ஹீரோவோடு டூயட் பாடுறதோடு நின்னுடும். ஆனால் இதில் ஸ்ருதிக்கு சூர்யாவுக்கு இணையான ரோல். படம் முழுக்க ஸ்ருதியோட ஆக்டிங் பளிச்னு தெரியும். நடிக்கும்போது கமல் சாரை வேறு வடிவத்துல பார்க்குற மாதிரியே இருக்கும். அப்படியொரு நாலெட்ஜ்.
'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் ஹீரோ அனுபவம் பற்றிச் சொல்லுங்க...?
அதுவா... அதுல நான் ஹீரோ இல்ல சார். ஒரு முக்கியமான கேரக்டர்ல நடிக்கிறேன்னு சொல்லலாம். ஏன்னா படத்தின் நிஜமான ஹீரோ டைரக்டர் ராஜேஷ், சந்தானம் ரெண்டு பேர்தான். இவங்க ரெண்டு பேராலே ஷூட்டிங் ஸ்பாட்டே செம ரகளையா இருக்கும்.
இதில் என்னதான் கதை...?
நான் ஒரு பொண்ணை லவ் பண்ணுவேன். அவர் ஒரு பொண்ணை லவ் பண்ணுவார். என் லவ்வரை அவருக்குப் பிடிக்காது. அவர் லவ்வரை எனக்குப் பிடிக்காது. இதுல சந்தானத்துக்கு இரண்டு காதலிகள். அப்படின்னா காமெடி எந்தளவுக்கு இருக்கும் பார்த்துக்கோங்க.
ஒரு தயாரிப்பாளரா சொல்லுங்க. உங்க ஹன்சிகா, ஸ்ருதி எப்படி?
உலகத்திலேயே கஷ்டமானது ரெண்டு பொண்ணுங்களை ஒப்பிடறதுதான். ஆனாலும் சொல்றேன் ஸ்ருதிக்கு உழைப்பு, ஹன்சிகாவுக்கு சிரிப்பு. போதுமா!
உங்க படங்களை எடுக்க ஷூட்டிங் லொகேஷன் அனுமதிக்கு போராடி வாங்க வேண்டியிருக்குன்னு சொல்றாங்களே...?
அதெல்லாம் ஒண்ணும் கிடையாது. போனவாரம்கூட பப்ளிக் ரோட்டுல எடுத்தோம். சத்யம் தியேட்டர்ல ரசிகர்கள் மத்தியில் நான் டான்ஸ் ஆடுற மாதிரி சீன் எடுத்தோம். யாரும் எங்களைத் தடுக்கவும் இல்லை. லொகேஷன் தரமாட்டோம்னு சொல்லவும் இல்லை. எல்லாம் சுமூகமாகப் போய்க்கிட்டிருக்கு.
சூர்யாவும் நீங்களும் நெருக்கமான ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டதா கேள்விப்பட்டோமே...?
ஆமா... நடிக்க ஆரம்பிச்ச பிறகு அவர்கிட்ட நிறைய ஆலோசனைகள் கேட்கிறேன். தயங்காமல், மறுக்காமல் எனக்கு நிறைய சொல்லித் தர்றார். அதுவும் ஃபிட்னஸ் விஷயத்தில் ரொம்பவும் ஆர்வமா எனக்கு கத்துக் கொடுக்கிறார். இந்த நட்பு சினிமாவைத் தாண்டி தொடரும்!
Share