Wednesday, March 16, 2011

கலைஞரைக் கண்டு ஒடும் திரையுலகினர்


இப்படி நடக்குமென்று கருணாநிதி நினைத்து இருப்பாரா அழையா விருந்தினரா கருணாநிதி பங்கேற்கும் விழா என்றால்,  வலிய வந்து கலந்து கொண்டு திரைத்துறையின் பிதாமகன் என்றெல்லாம் முதல்வரை புகழ்ந்து தள்ளிய நட்சத்திரங்கள் சிலர் இப்போது முதல்வர் விழா என்றாலே ஓட்டமெடுக்க ஆரம்பித்து விட்டார்களாம். பையனூரில் திரைப்பட கலைஞர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட சினிமா ஸ்டூடியோவை முதல்வர் கருணாநிதி திறந்து வைக்கிறார். இதற்கான பிரம்மாண்ட விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே விழாவில் பங்கேற்குமாறு நடிகர், நடிகையரை அழைத்தால் சூட்டிங், அது, இது என்று சொல்லி விழாவில் பங்கேற்காமல் இருக்க என்னென்ன பொய்களை சொல்ல முடியுமோ அவ்வளவு பொய்களையும் சொல்லி தவிர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள் நட்சத்திரங்கள்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக சினிமா துறையினருக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி இருக்கிறார் முதல்வர் கருணாநிதி. படத்திற்கு தமிழில் பெயர் வைத்தால் வரிசலுகை, சினிமா சூட்டிங் கட்டணம் குறைப்பு, பையனூர் அருகே இலவச நிலம், வீடு என பல சலுகைகளை அள்ளிக் கொடுத்திருக்கிறார். இந்த சலுகைகள் எல்லாம் முதல்வரின் குடும்பத்தினர் சினிமாத்துறையில் தீவிரம் காட்ட ஆரம்பித்திருப்பதால்தான் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினாலும், திரைத்துறையை சேர்ந்தவர்கள் கருணாநிதியை தலையில் தூக்கி வைத்து ஆடினார்கள். அவ்வப்போது முதல்வருக்கு ஏதாவது ஒரு விழா எடுத்து, அதில் முதல்வரின் சாதனைகள், திரைத்துறையில் முதல்வரின் ஈடுபாடு போன்றவற்றைக் கூறி, பாராட்டி அவரை மனம் குளிரச் செய்தனர். முதல்வரும் தவறாது இந்த விழாக்களில் பங்கேற்று, திரையுலகிற்கு தான் ஆற்றிய தொண்டுகளையும், வழங்கப்போகும் சலுகைகளையும் கூறி திரைத்துறையினரை மேலும் உற்சாகமூட்டுவதும் வழக்கமான ஒன்றாக இருந்து வந்தது.

ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இதுவரை முதல்வரை புகழ்ந்து பேசி, விழா எடுத்து கொண்டாடிய சினிமா கலைஞர்கள், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் திமுக குடும்ப அரசியல் மற்றும் அவர்களது ஆதிக்கம் தாங்க முடியவில்லை என்று வசை பாட ஆரம்பித்து விட்டனராம்.

 சினிமா கலைஞர்களுக்காக முதல்வர் கருணாநிதி வழங்கிய பையனூர் இலவச நிலத்தில் கட்டப்பட்டுள்ள சினிமா ஸ்டூடியோ திறப்பு விழா விரைவில் நடைபெற உள்ளது. இதில் முதல்வர் கருணாநிதிதான் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஸ்டூடியோவை திறந்து வைக்கவுள்ளார். அதற்கான விழா ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், விழாவில் கலந்து கொள்ளும்படி,  நடிகர் - நடிகைகளுக்கு அழைப்பிதழ் அனுப்பும் பணிகளும் நடந்து வருகிறது. உச்ச நடிகர்கள் 2 பேர் மட்டுமே இதுவரை கண்டிப்பாக வருகிறேன், என்று கூறியிருக்கிறார்கள். மற்ற நட்சத்திரங்களில் பெரும்பாலானோர்... ஓட்டமெடுத்துக் கொண்டிருக்கிறார்களாம். சூட்டிங் இருக்கிறது, ஏற்கனவே கால்ஷீட் கொடுத்திருக்கிறேன், அந்த தினத்தில் நான் குடும்பத்தோடு வெளிநாடு செல்கிறேன் என்று ஏதேதோ காரணம் சொல்லி விழாவை புறக்கணிப்பதிலேயே குறியாக இருக்கிறார்களாம். இன்னும் சிலர் முதல்வர் விழாவுக்கு எங்களை ஏன் கூப்பிடுறீங்க, நாங்க என்ன எம்.எல்.ஏ., க்களா? என்று கேள்வி கேட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் இன்னும் சிலர் இப்போதே அதிமுக,வுக்கும், ஜெயலலிதாவுக்கும் ஆதரவாகவும்,  திமுகவுக்கு எதிராகவும் சினிமா விழாக்களில் பேசத் தொடங்கி விட்டனர். சமீபத்தில் நடந்த சட்டப்படி குற்றம் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் சிலர் விஜய்க்கும். விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கும் ஆதரிக்கிறேன் பேர்வழி என கூறி, திமுக அரசை வெளிப்படையாகவே வசைபாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை புதிய படங்களின் ஒளிபரப்பு உரிமையை கலைஞர் டிவிக்கு விற்றுவந்த சில தயாரிப்பாளர்கள் இப்போது ஜெயா டி.வி., வாசலைத் தட்ட தயாராகிவிட்டார்கள் என்பது கூடுதல் தகவல்.

Share