Thursday, March 17, 2011

இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் அணிகள் பலப்பரீட்சை

சென்னையில் போட்டியில் நடைபெறும் உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளை சந்திக்கிறது இங்கிலாந்து.
காலிறுதிக்கு தகுதிபெற வேண்டுமானால் இந்த ஆட்டத்தில் வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இங்கிலாந்து களமிறங்குகிறது. இந்த ஆட்டத்தில் தோற்கும்பட்சத்தில் இங்கிலாந்து போட்டியிலிருந்து வெளியேற நேரிடும்.

இங்கிலாந்து அணிக்கு இதுவே கடைசி லீக் ஆட்டமாகும். இதுவரை 5 லீக் ஆட்டங்களில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி 2 வெற்றி, 2 தோல்வி, ஒரு டை என 5 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.

ஆனால் மேற்கிந்தியத் தீவுகள் அணியோ இதுவரை 4 ஆட்டங்களில் மட்டுமே விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த அணி கடைசி ஆட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவை சந்திக்கிறது.

கடைசி ஆட்டத்தில் நெருக்கடியை தவிர்ப்பதற்காக இங்கிலாந்துடனான ஆட்டத்தில் எப்படியாவது வென்று காலிறுதியை உறுதி செய்துவிட வேண்டும் என்ற முனைப்பில் மேற்கிந்தியத் தீவுகள் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"பி' பிரிவில் தென் ஆப்பிரிக்கா ஏற்கெனவே காலிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்துக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிபெறும் பட்சத்தில் அந்த அணி எளிதாக காலிறுதிக்குத் தகுதிபெற்றுவிடும்.

இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றிபெறும் பட்சத்தில், அந்த அணி 7 புள்ளிகளைப் பெற்றுவிடும். ஆனாலும் இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள், வங்கதேசம்- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் முடிவுகளைப் பொறுத்தே இங்கிலாந்தின் காலிறுதி வாய்ப்பு அமையும். ஒருவேளை தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேசம் வெற்றிபெற்றால் அந்த அணி 8 புள்ளிகளுடன் எளிதாக காலிறுதிக்கு தகுதிபெற்றுவிடும்.

இதனால் இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து பெரிய அளவில் ரன்களைக் குவிப்பதோடு, அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெறும் எண்ணத்தில் விளையாடக்கூடும்.

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரையில் அந்த அணி தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வருகிறது.

கேப்டன் ஸ்டிராஸ், சுழற்பந்துவீச்சாளர் கிரீம் ஸ்வான் ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்வான், அதில் இருந்து குணமடைந்து விட்டபோதிலும், பயிற்சியில் ஈடுபடவில்லை.

ஆனாலும் மேற்கிந்தியத் தீவுகள் எதிரான ஆட்டத்தில் அவர்கள் விளையாடுவார்கள் என்று அந்த அணியின் ஜொனாதான் டிராட் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே பீட்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் விலகியுள்ள நிலையில், காயத்தால் ஸ்வான் விலக நேர்ந்தால் அது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்.

கேப்டன் ஸ்டிராஸ், டிராட் ஆகியோர் சிறப்பாக ஆடி வருகின்றனர். டிராட் இதுவரை விளையாடியுள்ள 5 ஆட்டங்களில் 4 அரைசதங்களை விளாசியுள்ளார். பந்துவீச்சைப் பொறுத்தவரையில் மிகவும் மோசமான நிலையிலேயே இங்கிலாந்து உள்ளது. கடந்த 5 ஆட்டங்களில் அந்த அணிக்கு எதிராக 1,351 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளன.

மேற்கிந்தியத் தீவுகள் அணியைப் பொறுத்தவரையில் 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் இறங்கக்கூடும் என்று தெரிகிறது. அவர்களில் சுலைமான் பென் 4 ஆட்டங்களில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடியை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருடன் சேர்ந்து நிகிடா மில்லர், கிறிஸ் கெய்ல் ஆகியோரும் சுழற்பந்துவீச்சை கவனிப்பார்கள். வேகப்பந்துவீச்சைப் பொறுத்தவரையில் கெமர் ரோச், சமி ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். பேட்டிங்கில் கிறிஸ் கெயில், பொல்லார்டு ஆகியோர் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை மிரட்டக்கூடும். குறிப்பாக பொல்லார்டு அதிரடியாக ரன் குவித்து வருகிறார். மொத்தத்தில் இரு அணிகளுமே வெற்றிக்குப் போராடும் என்பதால் சென்னை ரசிகர்களுக்கு இந்த ஆட்டம் விருந்தாக அமையும்.

மேற்கிந்தியத் தீவுகள்:

டேரன் சமி (கேப்டன்), டேவன் ஸ்மித், கிறிஸ் கெயில், டேரன் பிராவோ, ராம்நரேஷ் சர்வான், சிவாநாராயண் சந்தர்பால், கைரன் பொல்லார்டு, டேவன் தாமஸ், சுலைமான் பென், நிகிடா மில்லர், கெமர் ரோச், கிர்க் எட்வர்ட்ஸ், ரவி ராம்பால், ஆண்ட்ரே ரஸல், டேவேந்திர பிஷூ.

இங்கிலாந்து

ஆண்ட்ரூ ஸ்டிராஸ் (கேப்டன்), மோர்கன், ஜொனாதான் டிராட், இயன் பெல், பால் காலிங்வுட், ரவி போபாரா, மாட் பிரையர், டிம் பிரெஸ்னன், கிரீம் ஸ்வான், ஜேம்ஸ் ஆன்டர்சன், மைக்கேல் யார்டி, அஜ்மல் ஷாஸத், ஜேம்ஸ் டிரட்வெல், லுக் ரைட், கிறிஸ் டிரம்லெட்.


Share