Friday, March 18, 2011

விடை பெறுகிறார் ஷோயப் அக்தர்


 இந்த உலகக் கோப்பை முடிந்த பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் அறிவித்துள்ளார்.
இதனை அவர் தனது அணி சகாக்களிடம் கூறியுள்ளார். அதன் பிறகு வீரர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். உடல்நிலையில் அடிக்கடி காயம் ஏற்படுவதால் அவர் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் என்று தெரிகிறது. இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு எதிராக அபாரமான 10 ஓவர்களை வீசிய அவர் நியூஸீலாந்து அணிக்கு எதிராக துவக்க ஸ்பெல்லிற்கு பிறகு கடைசி ஒரு சில ஓவர்களில் கடுமையாக ரன்களை வழங்கினார். கடைசி 4 ஓவர்களில் 92 ரன்கள் விளாசப்பட்டதில் பாகிஸ்தான் தோல்வி தழுவியது.
இதனால் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் நீக்கப்பட்டார். 1999ஆம் ஆண்டு கொல்கட்டாவில் ஆசிய டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ராகுல் திராவிடையும் சச்சின் டெண்டுல்கரையும் அடுத்தடுத்து பயங்கர யார்க்கர்களால் பவுல்டு செய்து புகழடைந்த ஷோயப் அக்தர் ஆஸ்ட்ரேலிய துவக்க வீரர் ஜஸ்டின் லாங்கர் மண்டையை ஒருமுறை பதம் பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
13 ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடியும், காயம், ஒழுங்கின்மை காரணமாக நிறைய போட்டிகளில் விளையாட முடியாமல் 46 டெஸ்ட் போட்டிகளையே அவர் விளையாட முடிந்தது. இதில் 178 விக்கெட்டுகளை 25.69 என்ற சராசரியில் எடுத்துள்ளார். ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 247 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளார்.
Share