Tuesday, March 22, 2011

கசிப்பு வீழ்ச்சியாம்: கள்ளு பாவனை அதிகரிப்பாம் !

தற்போது யாழ். மாவட்டத்தில் கசிப்பு உற்பத்தி மற்றும் நுகர்வு கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது வீழ்ச்சியடைந்துள்ளமை நல்லதொரு மாற்றம் என்கிறார் யாழ். மாவட்ட மதுவரித் திணைக்கள அத்தியட்சகர் என்.சோதிநாதன். கசிப்பு நுகர்வு வீழ்ச்சியடைந்து செல்கின்ற அதேவேளை கள்ளு நுகர்வு அதிகரித்துச் செல்கிறது என்றும் இது குறித்தும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளாராம். கடந்த 2009 ஆம் ஆண்டு கசிப்பு உற்பத்தி மற்றும் பாவனை தொடர்பாக 277 பேரைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினோம். கடந்த வருடம் 174பேரை நீதிமன்றில் ஆஜர்படுத்தினோம். இந்த வருடம் இதுவரையும் கசிப்புத் தொடர்பாக எந்த முறைப்பாடும் எமக்குக் கிடைக்க வில்லை, இது நல்லதொரு மாற்றமாகும் என்கிறார் என்.சோதிநாதன்.

அதாவது விடுதலைப் புலிகள் யாழில் இருந்த காலகட்டத்தைப் போல ஒரு பொன்னான காலகட்டம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் யாழில் வெளிநாட்டு, மற்றும் தென்னிலங்கை மதுபானங்களும் தாராளமாக விற்பனையாகிறது என்பதை குறிப்பிட இவர் மறந்துவிட்டார். யாழில் மதுபானங்களை விற்பதற்கு அனுமதி வழங்கியதில் மட்டும் சுமார் 54 லட்சம் ரூபா வருமானமாகக் கிடைக்கப்பெற்றதாக யாழ் நகரசபை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அப்படி என்றால் யாழ்ப்பாணத்தில் விற்கப்படும் ஒட்டுமொத்த மதுபானங்களுக்கும் வரி எவ்வளவு வரும், இது அனைத்தும் இலங்கை அரசுக்கே போகிறது என்பதனையும் மறக்கவேண்டாம்.

Share