Friday, March 18, 2011

ஜப்பானுக்கு 2 நாளில் மேலும் ஒரு பாரிய ஆபத்து: பிரான்ஸ் நிபுணர் எச்சரிக்கை


ஜப்பானில் வெடித்து சிதறிய அணு உலைகளால் அடுத்த 2 நாட்களில் மற்றொரு செர்னோபில் ஆபத்து ஏற்படக்கூடும் என்று பிரான்சை சேர்ந்த அணு சக்தி நிபுணர் எச்சரித்துள்ளார்.
உக்ரைன் நாட்டின் செர்னோபில் அணுமின் நிலையத்தில் 1986 ம் ஆண்டு ஏப்ரல் 26 ம் திகதி திடீரென ஏற்பட்ட மின்தடையால் அணு உலை பயங்கரமாக வெடித்தது. அதனால் வெளியான கதிர்வீச்சில் உக்ரைன் மட்டுமின்றி அண்டை நாடுகளை சேர்ந்த 57 பேர் உடனடியாக பலியாகினர். அணுக்கதிர்வீச்சால் ஏற்பட்ட புற்றுநோய்க்கு 4000 பேர் இறந்தனர்.
25 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது ஜப்பானில் பூகம்பத்தால் பியூகுஷிமா டைச்சி அணுமின் நிலையத்தின் 3 அணு உலைகள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின. அவற்றில் இருந்து கதிர்வீச்சு பரவி வருவதாக அஞ்சப்படுகிறது.
இது பற்றி பிரான்சின் கதிரியக்க பாதுகாப்பு மற்றும் அணுசக்தி மையத்தின் பாதுகாப்பு பிரிவு அதிகாரி தெய்ரி சார்லஸ் கூறியதாவது: ஜப்பான் அணு உலைகள் வெடிப்பால் ஏற்பட்டுள்ள சூழ்நிலை மிக ஆபத்தானது. அடுத்த 48 மணி நேரம் மிக முக்கியமானது. நெருக்கடியானது.
சூழ்நீலை மிகவும் அவநம்பிக்கை அளிக்கிறது. கடந்த சில நாட்களாக அணு உலைகளை குளிர்விக்கும் எல்லா நடவடிக்கைகளும் தோல்வியில் முடிந்துள்ளன. எனவே மற்றொரு செர்னோபில் துயரம் ஏற்படுமோ என்ற அச்சம் அதிகரித்துள்ளது. இவ்வாறு தெய்ரி சார்லஸ் தெரிவித்தார்
Share