Sunday, January 22, 2012

துடுப்பாட்ட செய்தி சங்ககார சதம் - இலங்கை திரிலர் வெற்றி : தொடரை கைப்பற்றியது தென்னாபிரிக்கா

தென்னாபிரிக்க அணியுடனான 5 ஆவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது. தென்னாபிரிக்காவின் ஜொஹான்னர்ஸ்பர்க்கில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட தென்னாபிரிக்க அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 312 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 314 ஓட்டங்களைப் பெற்றது. இத்தொடரின் 4 ஆவது போட்டியிலும் இலங்கை வெற்றியீட்டியிருந்தது. எனினும் முதல் போட்டிகளிலும் வென்ற தென்னாபிரிக்க அணி இத்தொடரின் வெற்றியை 3-2 விகிதத்தில் தனதாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 5 ஆவது போட்டியில் தென்னாபிரிக்க அணியின் சார்பில் அணித்தலைவர் ஏ.பி. வில்லியர்ஸ் 98 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 125 ஓட்டங்களைக் குவித்தார். முன்னாள் தலைவரான கிஹேம் ஸ்மித் 143 பந்துகளில் 125 ஓட்டங்களைக்குவித்தார். இலங்கை பந்துவீச்சாளர்களில் லஷித் மாலிங்க 79 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான உபுல் தரங்க 46 ஓட்டங்களையும் அணித்தலைவர் திலகரட்ன தில்ஷான் 41 ஓட்டங்களையும் பெற்றனர். குமார் சங்கக்கார சிறப்பாக துடுப்பெடுத்தாடி 97 பந்துகளில் 102 ஓட்டங்களைப் பெற்றார். லஹிரு திரிமான்ன 63 பந்துகளில் 69 ஓட்டங்களைப் பெற்றார்.
இப்போட்டியின் இறுதிக்கட்டம் மிக விறுவிறுப்பானதாக அமைந்தது.
கடைசி 3 ஓவர்களில் இலங்கை அணி வெற்றிபெறுவதற்கு 17 ஓட்டங்கள் தேவைப்பட்டன. 5விக்கெட்டுகள் கைவசமிருந்தன. இறுதி இரு ஓவர்களில் 9 ஓட்டங்கள் தேவைப்பட்டன.

49 ஆவது ஓவரில் இலங்கை அணி 3 ஓட்டங்களைப் பெற்றது. அந்த ஓவரின் கடைசி பந்தில் திசேர பெரேரா (2) ஆட்டமிழந்தார்.
கடைசி ஓவரில் 4 விக்கெட்டுகள் கைவசமிருந்த நிலையில் 6 ஓட்டங்கள் தேவைப்பட்டன. ரொபின் பீட்டர்சன் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் நுவன் குலசேகர ஓட்டமெதுவுமின்றி போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். 2 ஆவது பந்தில் ரங்கன ஹேரத் ஓர் ஒட்டம் பெற்றார். 3 ஆவது பந்தில் திரிமான்ன (63) மோர்கெல்லிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக லஷித் மாலிங்க துடுப்பெடுத்தாட வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சச்சித்ர சேனநாயக்கவை துடுப்பெடுத்தாட அனுப்பினார் தில்ஷான்.
சச்சித்திர தான் எதிர்கொண்ட முதல் பந்தில் ஓட்டமெதையும் பெறத் தவறினார். இதனால் கடைசி இரு பந்துகளில் இலங்கை 5 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. எனினும் 5 ஆவது பந்தில் சசித்திர அபாரமான சிக்ஸர் ஒன்றை அடித்து இலங்கையின் வெற்றியை உறுதிப்படுத்தானார் அவர்.

இப்போட்டியின் சிறப்பாட்டக்காராக குமார் சங்கக்காரவும் தொடரின் சிறப்பாட்டக்காரராக தென்னாபிரிக்க அணித்தலைவர் ஏ.பி. டி வில்லியர்ஸும் தெரிவாகினர். 2007 ஆம் ஆண்டின் பின்னர் சர்வதேச ஒருநாள் போட்டியொன்றில் ஓர் அணி தொடர்ச்சியாக இரு போட்டிகளில் 300 இற்குமேற்பட்ட ஓட்ட இலக்கை கடந்து வென்றமை இதுவே முதல் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குமுன் நியூஸிலாந்து அணி இவ்வாறு தொடர்ச்சியாக இரு போட்டிகளில் 300 இற்குமேற்பட்ட ஓட்ட இலக்கை கடந்து வென்றிருந்தது.
Share