Tuesday, January 10, 2012

ரஜினி பெயரில் விருது

எடிசன் விருதுகள் வழங்கும் விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெயரில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்படவுள்ளது. சிறந்த தமிழ்த் திரைப்படங்கள், நடிகர், நடிகைகள், கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு எடிசன் விருதுகள் என்ற பெயரில் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த ஆண்டுக்கான எடிசன் விருதுகள் வழங்கும் விழா வரும் பிப்ரவரி மாதம் 12-ம் திகதி சென்னை சேத்பட்டில் உள்ள லேடி ஆணடாள் பள்ளி அரங்கில் நடக்கவுள்ளது.

2011-ம் ஆண்டுக்கான சிறந்த படங்கள், சிறந்த கலைஞர்கள் ஆகியோர் கவுரவிக்கப்பட உள்ளனர். தனி குழு எதுவும் விருதுக்கான கலைஞர்களை தேர்வு செய்யவில்லை.

இணையதளத்தின் மூலம் வாக்கெடுப்பு முறையில், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் வாக்களித்து தேர்வு செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவின் சிறப்பு அம்சமாக, சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெயரில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட உள்ளது.

தமிழ் சினிமாவுக்கு உலகளாவிய மரியாதை, வர்த்தக எல்லையை விரிவுபடுத்தியது மற்றும் இளம் படைப்பாளிகளை ஊக்குவிப்பதில் நிகரற்றுத் திகழ்வது என பெருமை சேர்த்தவர் என்பதால் இந்த விருதினை சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெயரில் வழங்குவதாக நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரஜினி பெயரில் தனி விருது ஏற்படுத்தப்பட்டு வழங்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. நடிகரகள் விஜய், தனுஷ், அஞ்சலி, ரிச்சா, கவிஞர் வாலி, இயக்குனர் எஸ்பி முத்துராமன் உள்ளிட்ட முன்னணிக் கலைஞர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.
Share