Thursday, December 8, 2011

ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

சர்வதேச கிரிக்கட் கவுன்சில்(ஐ.சி.சி) ஒருநாள் போட்டிக்கான துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் பந்துவீச்சாளர்களின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
துடுப்பாட்ட தரவரிசையில் ஹஷிம் ஆம்லா(தென்ஆப்பிரிக்கா), டிவில்லியர்ஸ்(தென்ஆப்பிரிக்கா), ஜோனதன் டிராட்(இங்கிலாந்து) முறையே முதல் 3 இடங்களில் தொடர்ந்து நீடிக்கிறார்கள்.
இந்திய வீரர்களில் ரோகித் ஷர்மாவும், விராட் கோக்லியும் முன்னேற்றம் கண்டுள்ளனர். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதம் அடித்த விராட் கோக்லி, ஒரு இடம் ஏறி இந்திய அணித்தலைவர் டோனியுடன் 4-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணியுடன் ஹாட்ரிக் அரைசதம் விளாசிய ரோகித் ஷர்மா 21 இடங்கள் உயர்ந்து 35-வது இடத்தை பெற்றுள்ளார். கவுதம் கம்பீர் 7 இடங்களை இழந்து 19-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். சச்சின் தெண்டுல்கர் 18-வது இடத்திலும், தற்காலிக இந்திய அணித்தலைவர் ஷேவாக் 24-வது இடத்திலும் உள்ளனர்.
பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் முதலிடத்தில் பாகிஸ்தான் வீரரான சயீத் அஜ்மல் இருக்கிறார். 3-வது இடத்தில் நியூசிலாந்தின் வெட்டோரியும், 4-வது இடத்தில் இங்கிலாந்தின் ஸ்வானும் உள்ளனர்.
இதே போல் வங்காளதேச தொடரில் அசத்திய பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முகமது ஹபீஸ் 6 இடங்கள் கிடுகிடுவென எகிறி 2-வது இடத்தை ஆக்கிரமித்துள்ளார்.
இந்திய சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் முதல் முறையாக 20-க்குள் நுழைந்துள்ளார். சமீப காலமாக அவரது பந்துவீச்சு சீராக இருந்து வருவதால் இந்த உயர்வு கிடைத்துள்ளது. அவர் 21-வது இடத்தில் இருந்து 18-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
முதல் 10 வரிசைக்குள் இந்திய பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லை. இந்தியாவின் அதிகபட்ச தரநிலையாக அஸ்வினின் 18-வது இடம் தான் உள்ளது.
Share