Sunday, December 11, 2011

விஸ்வரூபத்துக்கு இதுவரை ரூ.52 கோடி செலவு!

கமல்ஹாசன் நடித்து இயக்கி வரும் விஸ்வரூபம் படத்திற்கு இதுவரை ரூ.52 கோடி செலவிடப்பட்டுள்ளதாம். கமல்ஹாசன் கதாநாயகனாக நடிப்பதுடன், டைரக்டர் பொறுப்பேற்று இயக்கி வரும் படம் விஸ்வரூபம். படத்தில் கமலுக்கு ஜோடிகளாக ஆன்ட்ரியா, பூஜாகுமார் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். படத்துக்காக கமல்ஹாசன் ஒரு பாடலையும் எழுதியிருக்கிறார். கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷராஹாசன், உதவி டைரக்டராக பணிபுரிகிறார்.

முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. அதையடுத்து ஜோர்டான் நாட்டில், 25 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. படத்தின் முக்கிய காட்சிகள் அங்கே படமாக்கப்பட்டன. வருகிற 16ம்தேதி முதல் அமெரிக்காவில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இதற்காக கமல்ஹாசன் உள்பட 75 பேர்களை கொண்ட படப்பிடிப்பு குழுவினர் அமெரிக்கா போகிறார்கள். அமெரிக்காவில் ஒரு மாதம் படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து லண்டனில் ஒரு மாதம் படப்பிடிப்பு நடைபெறும். அத்துடன், `விஸ்வரூபம் படப்பிடிப்பு முடிவடைகிறது.

இதுவரை 60 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்துக்காக, இதுவரை ரூ.52 கோடி செலவாகி இருக்கிறது. இந்த படம் குறித்து கமல்ஹாசன் அளித்துள்ள பேட்டியில், "நான் நடித்த தசாவதாரம், அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன் ஆகிய படங்களை விட பத்து மடங்கு பிரமாண்டமாக, மிகப்பெரிய படமாக இது இருக்கும் என்று கூறியுள்ளார்.
Share