Monday, March 28, 2011

இறுதிப் போட்டிக்கு செல்ல எத்தனிக்கும் நியூசிலாந்து



உலக கோப்பை தொடர் துவங்கும் முன் இந்திய துணைக்கண்டத்தில் நடந்த பல்வேறு தொடர்களில் நியூசிலாந்து அணி மிக மோசமாக தோற்றது.
வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 0-4, இந்தியாவுக்கு எதிராக 0-5 என தொடர் தோல்விகளால் துவண்டு இருந்தது. பின் சொந்த மண்ணில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் தோற்று வெறுப்பை சம்பாதித்தது. இந்நிலையில் அணியின் பயிற்சியாளராக, ஜான் ரைட் பொறுப்பேற்றார். பவுலிங் பயிற்சியாளராக தென் ஆப்ரிக்காவின் ஆலன் டொனால்டு நியமிக்கப்பட்டார். இவர்கள் இணைந்து, எப்படியும் அணி அரையிறுதிக்கு கொண்டு செல்வோம் என்று சபதம் செய்தனர்.
இதற்கேற்ப, பத்தாவது உலக கோப்பை தொடரை, கென்யாவுக்கு எதிரான மிகப்பெரிய வெற்றியுடன் துவக்கியது. பின் அடுத்தடுத்து சொதப்ப, பட்டியலில் நான்காவது இடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது.
ஆனால் காலிறுதியில் நியூசிலாந்து அணி, பி பிரிவில் முதலிடம் பிடித்த வலிமையான தென் ஆப்ரிக்க அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்ய நியூசிலாந்து 221 ரன்கள் மட்டும் எடுக்க, அவ்வளவு தான் தோல்வி உறுதி என்றனர். ஆனால் எதிர்பாராத திருப்பமாக, தென் ஆப்ரிக்க அணியை 172க்கு ஆல் அவுட் செய்து, ஆறாவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது வெட்டோரி அணி.
இதற்கு முன், 1975, 1979, 1992, 1999,மற்றும் 2007 தொடர்களில் அரையிறுதிக்கு முன்னேறிய போதும், ஒருமுறை கூட அதில் வெற்றி பெற்றதில்லை. இம்முறை லீக் போட்டியில் தோல்வியடைந்த இலங்கையை மீண்டும் அரையிறுதியில் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் மற்ற இடங்களில் விளையாடியதை விட, இந்திய துணைக்கண்டத்தில் அதிக போட்டிகளில் பங்கேற்ற அனுபவம் வெட்டோரி அணிக்கு உண்டு. இந்த அனுபவத்தை கொண்டு, இம்முறையாவது வெற்றி பெற்று, முதன் முறையாக பைனலுக்கு செல்லும் வழியை சரியாக கண்டுபிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Share