Friday, January 6, 2012

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்று 46வது பிறந்த நாள்!




விளம்பர ஜிங்கிள்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்த ஏ.ஆர்.ரஹ்மானை கண்டெடுத்தவர் மணிரத்னம். ரோஜா படம் வெளியாவதற்கு சரியாக ஒரு மாதம் முன்பு பிரபல வார இதழிக்கு தனது முதல் கன்னிப்பேட்டியைக் கொடுத்திருந்தார் ரஹ்மான். ரோஜா படத்துக்கு எப்படி மியூஸிக் பண்ணியிருக்கீங்க..? அடுத்த வாய்ப்புகள் எந்த மாதிரி வரும்னு நினைக்கிறீங்க? என்ற பேட்டியாளரின் கேள்விகளுக்கு ரஹ்மானின் பதில் இதுதான்.. "இந்தப் படத்தோட மியூஸிக் ஹிட் ஆகுமான்னு எனக்குத் தெரியாது. அடுத்து சான்ஸ் கிடைக்குமாங்கிறதும் தெரியாது. ஆனா, நிச்சயம் ஒரு நாள் தமிழ்நாட்டு இசையை உலகத் தரத்துக்குக் கொண்டுபோவேன்!"
உண்மையில் சொன்னதைச் செய்து காட்டினார் இசைப்புயல் ரஹ்மான்! இந்திய சினிமாவுக்கு கனவாக இருந்து வந்த ஆஸ்கர் விருதை ஒன்றுக்கு இரண்டாக வென்று காட்டி தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்த்தார். இசைக்கான கோல்டன் குளோப், கிராமி விருதுகளையும் வென்ற ரஹ்மான், இன்று இந்திய சினிமாவின் எல்லையைத் தாண்டி, ஹாலிவுட்டின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர் ஆகியிருக்கிறார். ஆம்! இசைப்புயலின் இந்த பிறந்த நாளில், ரஹ்மானின் ரசிகர்களுக்கு தித்திப்பான செய்தியாக வந்திருக்கிறது, ஹாலிவுட்டின் ஜாம்பவான் ஸ்டீவன் ஸ்பீல் பெர்க் படத்துக்கு ரஹ்மான் இசையமைத்து முடித்திருக்கிறார் என்ற தகவல். இதை விட ரஹ்மானுக்கு சிறந்த பிறந்த நாள் பரிசை அவர் கொடுக்க முடியாது.
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்று (ஜனவரி 6) 46வது பிறந்த தினம். நான்கு தேசிய விருதுகள், 14 ஃபிலிம் ஃபேர் விருதுகள், 13 பிலிம் ஃபேர் சவுத் விருதுகள், நான்கு பாலிவுட் மியூசிக் விருதுகள்... இன்னும் பல விருதுகளோடு தனது இசை வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தாலும், அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றவை, ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்திற்காக உருவாக்கிய ஜெய் ஹோ..பாடல் தொகுப்பு மற்றும் பின்னணி இசைக்காக கிடைக்கப்பெற்ற இரு ஆஸ்கர் விருதுகளும், கோல்டன் குளோப் விருது மற்றும் பாஃப்டா விருதுகளுமே.
Share