Monday, April 25, 2011

மண்டேலா தலைமையிலான ஜனநாயக அமைப்பு போர்க்குற்ற விசாரணைகளை வலிவுறுத்தும் !


நெல்சன் மண்டேலா தலைமையிலான உலகளாவிய ஜனநாயக அமைப்பு இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு வலியுறுத்துகின்றன.
சர்வதேச நாடுகளின் முக்கிய தலைவர்கள் பலர் ஒன்று சோ்ந்து தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா தலைமையில் “த எல்டர்ஸ்” எனும் பெயரிலான அமைப்பொன்றை உருவாக்கிக் கொண்டுள்ளனர்.
அந்த அமைப்பின் ஒட்டு மொத்த உறுப்பினர்களும்  இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் முறையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். அது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிக்கை யொன்றையும் வெளியிட அவர்கள் தீர்மானித்துள்ளனர்.
” த எல்டர்ஸ்” அமைப்பில் நெல்சன் மண்டேலா, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும் இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் இராஜதந்திரியுமான ஜிம்மி கார்ட்டர்,  மியன்மாரின் ஜனநாயகத் தலைவி அவுன்சான் சூகி, முன்னை நாள் ஐ.நா. செயலளார் நாயகம் கொபி அன்னான், முன்னாள் பின்லாந்து ஜனாதிபதியும் நோபல் பரிசு பெற்றவருமான மார்டி அதிசாரி, முன்னை நாள் ஐ.நா. வின் மனித உரிமைகள் ஆணையாளரும், முன்னாள் அயர்லாந்து ஜனாதிபதியுமான மாரி ரொபின்சன், தென்னாபிரிக்காவின் பிரபல பிஷப் டெஸ்மன் டுட்டு ஆகியோரும் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளனர்.
இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து சுயாதீன விசாரணையொன்றின் அவசியம் குறித்து அவர்களால் விடுக்கப்படவுள்ள அறிக்கையானது, சர்வதேச அளவில் இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணைகளுக்கு இன்னுமொரு உந்து சக்தியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Share