Sunday, March 6, 2011

அயர்லாந்தை வென்றது இந்தியா


பெங்களூரில் நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் யுவ்ராஜ் சிங்கின் திறமைகளால் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
41-வது ஓவரில் 167/5 என்று இருந்த இந்தியா 46-வது ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வெற்றிக்கான ரன்களை யூசுப் பவுண்டரி மூலம் பெற்றார்.
41-வது ஓவரில் தோனி 34 ரன்கள் எடுத்து டாக்ரெல் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனவுடன் ஆட்டம் லேசாக அயர்லாந்து பக்கம் செல்கிறதோ என்ற ஐயம் எழுந்தது. ஆனால் அதே ஓவரில் மீதமிருந்த 5 பந்துகளில் லாங் ஆன் திசையில் இரண்டு மிகப்பெரிய சிக்சர்களையும் அதே திசையில் ஒரு பவுண்டரியையும் அடித்து அந்த ஓவரிலேயே அயர்லாந்தின் வெற்றி ஆசைகளைத் தகர்த்தார் அதிரடி மன்னன் யூசுப் பத்தான்.
பந்து வீச்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய யுவ்ராஜ் சிங் பேட்டிங்கிலும் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
ஒரே போட்டியில் 50 ரன்களையும் 5 விக்கெட்டுகளையும் இதுவரை ஒருவரும் எடுத்ததில்லை என்று கூறப்படுகிறது.
சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழந்த பிறகு கோலியும், யுவ்ராஜும் இணைந்து ஸ்கோரை 100 ரன்களுக்கு உயத்தினர், அப்போது யுவ்ராஜ் அடித்த ஷாட்டிற்கு படு வேகமாக ஓடினார் கோலி ஆனால் யுவ்ராஜ் பாதி தூரம் வந்து பின்பு தன் பேட்டிங் முனைக்க்கு திரும்பினார். கோலி ரன் அவுட்டாக 100/4 என்று மைதானத்தில் நிசப்தமும், தோல்வி குறித்த அச்சமும் ரசிகர்களிடையே எழுந்தது.
ஆனால் அதன் பிறகு களமிறங்கிய தோனி, யுவ்ராஜுடன் இணைந்து 5-வது விக்கெட்டுக்காக 67 ரன்களைச் சேர்த்தனர்.
அப்போது 50 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்த தோனி டாக்ரெல் பந்தைதில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய யூசுப் பத்தான் முதல் பந்தை விட்டார், இரண்டாவது ஷாட் பிட்ச் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். அடுத்த பந்து லேசாக டாக்ரெலால் பிளைட் செய்யப்பட தூக்கி சிக்சருக்கு அடித்தார். மீண்டும் அடுத்த பந்தில் ரன் இல்லை. அடுத்த பந்து லேசான பிளைட் மீண்டும் லாங் ஆன் திசையில் ரசிகர்கள் மத்தியில் பந்து போய் விழுந்தது.
அதன் பிறகு ஆஃப் ஸ்பின்னர் ஸ்டர்லிங் பந்து ஒன்றும் லேசாக பிளைட் செய்யப்பட அதனையும் சிக்சருக்குத் தூக்கினார் யூசுப் பத்தான்.
அதன் பிறகு யுவ்ராஜ் சிங் ஃபுல்டாஸ் பந்தை மிட்விக்கெட் பவுண்டரிக்கு விரட்டி  அரை சதத்தை கடந்தார்.
கடைசியில் யூசுப் பத்தான் பைன்லெக் திசையில் பவுண்டரி அடித்து வெற்றி பெறச் செய்தார்.
24 பந்துகளைச் சந்தித்த யூசுப் பத்தான் 2 பவுண்டரிகளையும் 3 சிக்சர்களையும் அடித்து 30 ரன்களை எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.
அயர்லாந்து அணியின் கேப்டன் போர்ட்டர்ஃபீல்ட் அபாரமாக அணியை வழி நடத்தினார். நல்ல களத்தடுப்பு வியூகம் அமைத்தார். பந்து வீச்சு குறிப்பாக ஜான்ஸ்டன், ரான்கின், ஸ்பின்னர் டாக்ரெல் ஆகியோர் இந்தியாவுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றனர்.
அயர்லாந்து 8 பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தினர். இதில் ஜான்ஸ்டன், டாக்ரெல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ரான்கின் விக்கெட்டுகளை எடுக்காவிட்டாலும் 10 ஓவர்களில் 34 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு கைதேர்ந்த வேகப்பந்து வீச்ச்சளர் போல் வீசினர்.
நெருக்கடியிலிருந்து இந்தியா ஒருவழியாக மீண்டு வந்து வென்றது.
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முதல் முறையாக 50 ரன்கள் 5 விக்கெட்டுகள் என்ற சாதனையை நிக்ழ்த்திய யுவ்ராஜ் சிங் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்


Share